இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீடிப்பு!
இஸ்ரேலிய சிறைச்சாலைகளிலிருந்து மேலும் 33 பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்டவர்களில் 30 சிறுவர்களும் மூன்று பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினால் ஒப்புக் கொள்ளப்பட்ட போர்நிறுத்தத்துடன் இணைந்ததாக குறித்த 33 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேலும் 11 இஸ்ரேலிய பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஹமாஸுற்கு இடையிலான 4 நாள் போர் நிறுத்த உடன்படிக்கை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றுடன் குறித்த தற்காலிக போர்நிறுத்தம் நிறைவடையவிருந்த நிலையில், தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக இரு தரப்பினருக்கும் இடையிலான மத்தியஸ்தராக செயற்படும் கட்டார் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்ட அதே நிபந்தனைகளின் கீழ் இந்த போர் நிறுத்தம் தொடருமென ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கமைய இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பாலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு ஈடாக ஹமாஸ் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதியை விடுவிக்கிறது.
அதன்படி, இதுவரை 117 பாலஸ்தீனர்களுக்கு ஈடாக 39 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.