முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இந்தியாவில் கைது!

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், நேற்று (12) இந்தியாவில் தமிழ்நாடு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்த முன்னாள் எம்.பி., கேரளாவின் கொச்சியில், பிரிதொரு கடவுச்சீட்டை பயன்படுத்தி அங்கிருந்து ஐரோப்பிய நாட்டிற்குச் செல்ல முயன்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு பயணம் செய்வதற்காக அவர் வழங்கிய கடவுச்சீட்டுடன் கூடுதலாக, அவரிடம் மற்றொரு கடவுச்சீட்டு இருந்ததாகவும், அந்த கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வவுனியாவில் நபர் ஒருவரிடம் நிதி மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் இரண்டு மாதங்களுக்கு முன்பு வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், தான் பெற்ற பணத்தை பத்து தவணைகளில் செலுத்துவதாக வவுனியா நீதிமன்றத்தில் உறுதியளித்ததை அடுத்து நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்தது.

பிணையில் விடுதலை செய்யப்பட்ட அவர், நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.