பசியினால் உயிரிழந்த ஐவர், தலா 8 லட்சம் ரூபாயில் படகு - 19 நாட்கள் பயணம் தந்த அனுபவம்!
''பசியினால் உயிரிழந்த ஐந்து பேர், 8 இலட்சம் ரூபா வழங்கி படகினை கொள்வனவு செய்து, கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டோம்'' மியன்மார் அகதிகள் பகிர்ந்து கொண்ட அனுபவ பதிவு!
மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை ஐக்கிய நாடுகள் சபை பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கைக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்தநிலையில் இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபாய் வழங்கி படகினை கொள்வனவு செய்து, கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு கடலில் மீட்கப்பட்ட மியான்மார் மக்களின் சோகக்கதை கண்ணீரை வரவழைந்துள்ளது.