மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - இலங்கைத் தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் - அண்ணாமலை!
காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சியின் போது ஏற்பட்ட தவறுகளை சரி செய்ய, பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டமைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சியின் போது ஏற்பட்ட தவறுகளை சரி செய்ய, பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டமைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாரதீய ஜனதாக் கட்சி சார்பில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்காமல், தற்போது அக்கறை இருப்பது போன்று தி.மு.க அரசாங்கம் இரட்டை வேடம் போடுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குற்றம்சுமத்தியுள்ளார்.
குறித்த அறிக்கையில் “இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தில் முழுமையாக கடந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணி ஆட்சியின் தவறுகளை வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது.
இலங்கையில் போரின் மத்தியில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது இந்தியாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வதற்காக புதுடில்லிக்கு பறந்தவர்கள் ஏதோ கடிதங்களை எழுதியே பிரச்சினைகளை தீர்த்து விட்டதைப் போன்று இன்று பெருமை அடித்துக் கொண்டிருப்பது நகைப்புக்கிடமான விடயம்.
தி.மு.க ஆட்சியில் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது பா.ஜ.க. தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தமிழகத்தில் அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க அரசாங்கம் வழக்கிற்கு தேவையான ஆவணங்களைக் கூட நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், கச்சத்தீவு நம் கையை விட்டுச் செல்ல காரணமாக இருந்தது.
அதன்பின்னர் தி.மு.க பலமுறை பல கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகித்த போதும் கச்சத்தீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கச்சத்தீவை பற்றிப் பேச தி.மு.க.வுக்கு என்ன தகுதி இருக்கின்றது?
தி.மு.க.வை விட இலங்கைத் தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி.
இலங்கை தமிழ் பேசும் மக்களுக்காக 51,000 வீடுகள், தொழிற்கூடங்கள், வீதிகள், தொடருந்து போக்குவரத்து வசதிகள், கப்பல் சேவை, கலாசார மையம் என மக்கள் வாழ்வாதாரம் உயர்வதற்காக பிரதமர் மோடி ஏராளமான நலப்பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13ம் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்த பிரதமர் மோடி இரண்டு முறைகள் வலியுறுத்தி இருக்கிறார்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நீலிக்கண்ணீர் வடிக்கின்றார்.
எப்போதும் இல்லாத அளவிற்கு மீனவர்கள் கைது செய்யப்படும் பட்சத்தில் மத்திய வெளியுறவுத் துறை துரிதமாக செயற்பட்டு மீனவர்களுக்கு உடனடி சட்ட உதவிகளை வழங்கி அவர்களை மீட்டு வருகின்றது.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காணாமல் தற்போது அக்கறை உள்ளது போன்று தி.மு.க அரசாங்கம் இரட்டை வேடம் போடுகின்றது” என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.