கடமையிலுள்ள இராணுவத்தினர் மீள பெறல் - உண்மை நிலைமை என்ன?
மிஹிந்தலை புனித பூமியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மீள பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
இதன்படி, மிஹிந்தலை புனித பூமியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 251 பொலிஸார், இராணுவத்தினரையும் மீள பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிந்திக் கிடைத்த செய்தி -
வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை விகாரையில் இருந்து இராணுவத்தினர் திரும்பப் பெறப்பட்ட நிலையில், அந்த இடங்களுக்கு பொலிஸார் கடமைகளைத் தொடர்வார்கள்.
எனினும் அவர்களும் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் கூற்றுக்களை இலங்கை பொலிஸ் திணைக்களம் மறுத்துள்ளது.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் பல்வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை நீக்கும் தீர்மானத்தின் கீழ், நீண்ட காலமாக அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகளும் மீளப் பெறப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எவ்வாறாயினும், மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
முன்னதாக, மிஹிந்தலை விகாரையில் பல்வேறு பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த 200 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தொடர்பில் விகாரையின் பிரதமகுரு உயிரச்சுறுத்தல் அச்சத்தை வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தினர் அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரவி ஹேரத் தெரிவித்தார்.
முன்னதாக, படையினருடன் செயற்படும் இரண்டு சாதாரண பிரஜைகள், தமது உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக விகாரையின் பிரதம குரு தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முறையிட்டிருந்தார்.
எனினும் அந்த இருவரும் இராணுவத்தினரே என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது.