ஸ்கொட்லாந்தை வென்று சுப்பர் 6 இல் நுழைந்தது இலங்கை அணி!
புலாவாயோ குவீன்ஸ் பார்க் விளையாட்டரங்கில் இன்று (27) நடைபெற்ற பி குழுவிற்கான போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை 82 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை கிரிக்கட் அணி, ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் முழுமையான வெற்றியுடன் சுப்பர் 6 சுற்றுக்கு நுழைந்துள்ளது.
புலாவாயோ குவீன்ஸ் பார்க் விளையாட்டரங்கில் இன்று (27) நடைபெற்ற பி குழுவிற்கான போட்டியில் ஸ்கொட்லாந்து அணியை 82 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை கிரிக்கட் அணி, ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் முழுமையான வெற்றியுடன் சுப்பர் 6 சுற்றுக்கு நுழைந்துள்ளது.
கடைசி தகுதிகாண் போட்டியில் துடுப்பாட்டத்தில் இலங்கை அணி, பெருமளவில் பிரகாசிக்காத போதிலும் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு ஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் வெற்றிபெற்றது.
பெத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலன்க ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், சகல பந்து வீச்சாளர்களினதும் துல்லியமான பந்துவீச்சு என்பன இலங்கை அணியை வெற்றிபெறச் செய்தன.
அந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அணி, 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றது.
திமுத் கருணாரட்ன (7), குசல் மெண்டிஸ் (1) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த நிலையில், இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
எனினும், பெத்தும் நிஸ்ஸங்கவும், சதீர சமரவிக்ரமவும் 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு வலுசேர்த்தனர்.
சதீர சமரவிக்ரம (26) ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸங்க மேலும் 44 ஓட்டங்களை 4ஆவது விக்கெட்டில் சரித் அசலன்கவுடன் பகிர்ந்தார்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸங்க 10 நான்கு ஓட்டங்களுடன் 75 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்து வௌியேறினார்.
5 ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சரித் அசலன்கவும், தனஞ்சய டி சில்வாவும் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து 200 ஓட்டங்களைக் கடப்பதற்கு இலங்கை அணிக்கு உதவினர். அவர்கள் இருவரது இணைப்பாட்டமே இலங்கை அணியின் இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
சரித் அசலன்க 4 பவுண்டறிகள், 2 ஆறு ஓட்டங்களுடன் 63 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களையும் பின்வரிசையில் வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களையும் மஹீஷ் தீக்ஷன ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் கிறிஸ் க்றீவ்ஸ் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மார்க் வொட் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கிறிஸ் சோல் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
246 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 29 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
ஆரம்ப வீரர் கிறிஸ்டோபர் மெக்ப்றைட் 29 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் ஏனைய முன்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.
ஒரு கட்டத்தில் 22ஆவது ஓவரில் ஸ்கொட்லாந்து அணியின் 8ஆவது வீக்கெட் வீழ்த்தப்பட்ட போது அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 100 ஓட்டங்களாக இருந்தது.
கிறிஸ் க்றீவ்ஸ் 41 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களையும் கிறிஸ் சோல் 17 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட மார்க் வொட் 14 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாக மஹீஷ் தீக்ஷன தெரிவு செய்யப்பட்டார்.