தமிழ்நாடு முதல்வருக்கு அவசர கடிதம் - விடுதலையானவர்களை அழைத்து வர கோரிக்கை!
இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சாந்தனின் தாயாரால் தனக்கு வழங்கப்பட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
''32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
இதனால், இன்று வரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து, முதுமைக் காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்க்க வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவண செய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வு நிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவண செய்யுமாறு தங்களைக் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்" என சிவஞானம் சிறிதரனினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.