உலகத் தமிழர் பேரவை - ராமன்ய பௌத்த பீடாதிபதிகளை சந்தித்துள்ளது!
உலகத் தமிழர் பேரவையினர் இன்றைய தினம் (10) ராமன்ய மகாநிக்காய பீடத்தினரை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதோடு தாம் மேற்கொண்டுள்ள மக்கள் மயப்படுத்தப்பட்ட வேலை திட்டம் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்
குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சு.சுரேந்திரன் :
இலங்கையிலுள்ள நான்கு பௌத்த பீடங்களில் ஒன்றாகிய ராமன்ய மகாநிக்காய பீடத்தினரை உலகத் தமிழர் பேரவையினரும் பௌத்த பிக்குமார் அடங்கிய குழுவினரும் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்
இந்த சந்திப்பில் எம்மால் தயாரிக்கப்பட்ட இமயமலை பிரகடனத்தினையும் கையளித்தோம்.
குறித்த சந்திப்பில் ராமன்ய பீடத்தின் துணைப் பொதுச் செயலாளர் ராமன்ய நிக்காய பீடம் தம்மவன்ச தேரர் கலந்துகொண்டு எமக்கு ஆசீர்வாதமும் தந்தார்.
அதாவது சந்திப்பில் அவர்கள் தெரிவித்த கருத்து என்னவென்றால் இலங்கையில் அனைவரும் சமம் என்ற ஒரு நிலை ஏற்படும் போதுதான் இலங்கையில் பொருளாதார மேம்பாடு மற்றும் ஏனைய விடயங்களில் மேம்பாடு ஏற்படுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளன.
இலங்கையில் குறிப்பாக சமாதானம், சமதர்மம், நல்லிணக்கம் என்பன அனைவரும் சமம் என ஏற்றுக் கொள்ளப்பட்டால் மாத்திரமே ஏற்படும்.
எனவே மக்கள் மயப்படுத்தப்படுகின்ற இந்த வேலை திட்டத்திற்கு தாங்கள் பூரண ஆதரவினை வழங்குவதாகவும் மக்கள் மத்தியில் இந்த வேலை திட்டம் மேற்கொள்ளப்படும் போது இந்த வேலைத்திட்டம் வெற்றியளிக்குமென தெரிவித்ததோடு தமக்கு ஆசீர்வாதமளித்ததாகவும் உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சு.சுரேந்திரன் தெரிவித்தார்.