வற் வரி அதிகரிப்பு - சுற்றுலாப் பயணிகள் சிரமம்!

வற் எனப்படும் பெறுமதி சேர் வரி அமுல்படுத்தப்பட்டமையினால் சீகிரியாவை பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சீகிரிய சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

வற் வரி அதிகரிப்பு - சுற்றுலாப் பயணிகள் சிரமம்!

இதுவரை காலமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிகிரியாவை பார்வையிடுவதற்கு, அனுமதிச் சீட்டுக்களை டொலரில் கொள்வனவு செய்யும் நிலை காணப்பட்டது.

தற்போது, பெறுமதி சேர்வரி அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் அனுமதி சீட்டுக்கள் ரூபாய் நாணய அலகில் மாத்திரம் வழங்கப்படுதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் மோரேமட தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சிகிரியாவை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு 30 டொலர் அறவிடப்பட்டு வந்த நிலையில், வற் எனப்படும் பெறுமதி சேர்வரி திருத்தத்தை அமுல்படுத்தியதன் பின்னர், அந்த தொகை 36 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் டொலரில் அனுமதி சீட்டுக்களை கொள்வனவு செய்யும் நிலைமை நடைமுறையில் உள்ளது. 

எனினும் மீதமுள்ள பணத்தை டொலரில் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.

இதன்காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரூபாய் மற்றும் வங்கி அட்டைகளில் அனுமதி சீட்டுக்களை கொள்வனவு செய்யும் போது, பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சீகிரியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இலங்கை நாணயத்தில் 11,772 ரூபாய் அறவிடப்படுகிறது.

இதன்காரணமாக பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சீகிரியாவிற்கு விஜயம் செய்யாமல் சீகிரியாவை சுற்றி உள்ள இடங்களை பார்வையிட செல்வதாகவும் சீகிரிய சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் சமன் மோரேமட மேலும் தெரிவித்துள்ளார்.