இணையவழி பாதுகாப்புச் சட்டமூலத்தை அங்கீகரிக்க வேண்டாம் - மஹிந்த யாப்பாவுக்கு வலியுறுத்தல்!
இலங்கையில் சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்புச் சட்டமூலம், அண்மையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அது உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுமையாக உள்ளடக்கியிருக்கின்றதா என்பதைச் சரிபார்க்காமல், அதனை அங்கீகரிக்க வேண்டாம் என ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் இலங்கையின் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளன.
ஊடகங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக எழுச்சி பெறும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
அந்த கடிதத்தில் 'கருத்துச் சுதந்திரத்திற்கு முற்றிலும் ஆபத்தை ஏற்படுத்தும்' உத்தேச சட்டத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.
உயர்நீதிமன்றின் உத்தரவுகளை கருத்திற்கொள்ளாமல், இந்த யோசனை, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
குறித்த யோசனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 45 அடிப்படை உரிமை மனுக்களின் பதிவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்படாமை, அரசியலமைப்பை தெளிவாக மீறுகின்ற செயலாகும்.
அத்துடன் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்றும் ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் சுட்டிக்காட்டியுள்ளன.
வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை எதிர்கொள்ளவே இணையவழி பாதுகாப்பு யோசனையை அவசரமாக சட்டமாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது தெளிவாகிறது.
இந்தநிலையில், நிறைவேற்றப்பட்டுள்ள குறித்த யோசனையில் தனது கையெழுத்தை இடுவதற்கு முன், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் திருத்தங்கள் இணைக்கப்பட்டுள்ளனவா என்பதை சபாநாயகர் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த அமைப்புக்கள் கோரியுள்ளன.