மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமைக்கு அணி சார்பில் மன்னிப்பு கோருகிறேன் - அஞ்சலோ மெத்திவ்ஸ்!
வரலாற்றில் முதன்முறையாக 20-20 உலகக் கிண்ணப் போட்டியின் ஆரம்பச் சுற்றில் இருந்து வெளியேற்றப்பட்ட இலங்கை அணி நாளை (17) நெதர்லாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஆரம்பச் சுற்றின் இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது.
மேற்கிந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் நடைபெறும் இப்போட்டி காலை 6 மணிக்குத் ஆரம்பிக்கும்.
இலங்கை அணி பூர்வாங்க சுற்றில் பங்குபற்றிய மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்ததுடன், நேபாளத்திற்கு இடையில் நடைபெறவிருந்த மூன்றாவது போட்டி மழையினால் கைவிடப்பட்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், 'டி' குழுவில் கடைசி இடத்தில் இருக்கும் இலங்கை, ஐ.சி.சி.யின் முழு உறுப்பினராக இருந்து தோல்வி அவமானத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, நாளை நெதர்லாந்துடன் போட்டியில் களமிறங்கவுள்ளது.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ், நாட்டின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போனமைக்காக தமது அணி சார்பில் மன்னிப்பு கோரியுள்ளார்.
உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட அவமானமான தோல்வி குறித்து செயின்ட் லூசியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சலோ மெத்திவ்ஸ், போட்டியில் அணி விளையாடிய விதம் தன்னை ஈர்க்கவில்லை என்று கூறினார்.