அமெரிக்க ஏவுகணையைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்!
அமெரிக்க வழங்கிய நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகளைக் கொண்டு, ரஷ்யாவின் பிரையன்ஸ்க் எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ நிலை மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
தாங்கள் வழங்கிய ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவிலுள்ள இராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஒரு சில மாதங்களுக்கு முன்பே அனுமதி வழங்கியிருந்த நிலையில், உக்ரைன் தற்போது அதுபோன்றதொரு தாக்குதலை நிகழ்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அண்மைக் காலமாக உக்ரைனின் காா்கிவ் பிராந்தியத்தில் முன்னேறிவரும் ரஷ்ய படையினா், எல்லைக்கு அப்பால் மிக நெருக்கத்தில் இருந்தபடி அதற்கான தாக்குதல்களை நடத்திவருகின்றனா். எனவே, தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக எல்லைக்கு நெருக்கத்தில் உள்ள ரஷிய ராணுவ நிலைகள் மீது மட்டும் தாக்குதல் நடத்துவதற்கு தங்கள் ஆயுதங்களை உக்ரைன் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பைடன் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏ.டி.ஏ.சி.எம்.எஸ் நவீன ஏவுகணை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.