பிரான்ஸ் தமிழ் வர்த்தக தாய்க்கு இறுதி வணக்கம்

பிரான்ஸ் தமிழ் வர்த்தக தாய்க்கு இறுதி வணக்கம்

தமிழ் மண்ணையும், தமிழ் மக்களையும் ஆழமாக நேசித்த ஒரு நல்ல அன்னையை இன்று தமிழர் தேசம் இழந்துவிட்டது. எமது போராட்டத்தின் வளர்ச்சிக்கும்,உயர்ச்சிக்கும் துணையாக நின்ற அற்புதமான தாய் ஒருவரை நாம் இன்று இழந்துவிட்டோம்.

திருமதி. செல்வராசா சந்திரமணி அவர்கள் எளிமையும் நேர்மையும் கொண்ட தனித்துவமான மனிதர். திருமலை மண்ணில் பிறந்து அந்த மண் பெருமைப்படும்படியாக வாழ்ந்தவர். தாய் மண்ணின் விடுதலை மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.1985ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி சிங்கள சிறையின் கொடுமையை எதிர் கொண்டவர்.

வர்த்தகத் துறையில் நிறைந்த அறிவு படைத்தவர், தமிழினத்தின் தலைசிறந்த வர்த்தகப் பெருமகள். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக புலம்பெயர் ஈழத்தமிழர் வாழ்வியலிலும்,விடுதலைப் பயணத்திலும் ஓயாது பங்களிப்பை வழங்கி வந்தவர். தமிழீழ மண்ணையும், அந்த மண்ணின் விடுதலையையும் ஆழமாக நேசித்து மறைமுகமாக அன்னார் அரும்பணியாற்றி வந்தவர்.

திருமதி,செல்வராசா சந்திரமணி அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப்பற்றிற்கும் மதிப்பளித்து அவருக்கு எமது இறுதிவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

உன்னத இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு அழித்துவிடுவதில்லை. எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்களுக்கு என்றும் அழியாத இடமுண்டு. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எமது அன்பான ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.