நேசராசா டக்சிதா சாதனை : வக்ஷான், மிதுன்ராஜ், பிரசானுக்கு 2 பதக்கங்கள்!
இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 102ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்று (27) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.
இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரானது சிறப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியாக அமைந்த போதிலும், போட்டித் தொடர் நடைபெற்ற 3 தினங்களில் எதிர்பார்த்த அளவில் மெய்வல்லுனர்களில் யாரும் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டவில்லை.
இம்முறை போட்டித் தொடரில் ஒரேயொரு இலங்கை சாதனையுடன், 2 கனிஷ்ட போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.
இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கின் நட்சத்திர மெய்வல்லுனர் வீராங்கனை நேசராசா டக்சிதா புதிய இலங்கை அளவிலான சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இதனிடையே, இந்த ஆண்டு தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரராக 400 மீற்றர் வீரர் அருண தர்ஷனவும், அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனையாக 800 மீற்றர் வீராங்கனையான தருஷி கருணாரத்னவும் தெரிவாகினர்.
இந்த நிலையில், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தமிழ் பேசுகின்ற வீரர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
குறிப்பாக வட மாகாணத்தைப் பொறுத்தவரை நேசராசா டக்சிதா தவிர அருந்தவராசா புவிதரன் மற்றும் எஸ். மிதுன்ராஜ் ஆகிய இருவரும் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
அதேபோல, மலையகத்தைச் சேர்ந்த வின்ராஜ் வக்ஷான், ஜெயகாந்தன் பிரசான் மற்றும் முத்துசாமி சிவராஜன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.
சாதனை நாயகி நேசராசா டக்சிதா
பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்ட மெய்வல்லுனர் சங்கம் சார்பில் போட்டியிட்ட நேசராசா டக்சிதா புதிய இலங்கை சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார்.
குறித்த போட்டியில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே டக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
முன்னதாக 2022ஆம் ஆண்டு இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா 3.71 மீற்றர் உயரத்தைத் தாவி நிலைநாட்டியிருந்த இலங்கை சாதனையையே டக்சிதா முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான இவர் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார்.
புவிதரனுக்கு தங்கம்
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்காரரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரன், 5.00 மீற்றர் உயர் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் 5.17 மீற்றர் உயரம் தாவிய புவிதரன், இலங்கை மட்டத்தில் சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் தற்போது இராணுவ விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மிதுன்ராஜுக்கு இரட்டை பதக்கம்
ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 14.94 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவரான எஸ்.மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
அதேபோல, ஆண்களுக்கான தட்டெறிதலில் 45.08 மீற்றர் தூரத்தை மிதுன்ராஜ் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். இது அவரது தனிப்பட்ட அதிகூடிய தூரப் பெறுதியாகும்.
வக்ஷான், பிரசானுக்கு 2 பதக்கங்கள்
ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 51.61 செக்கன்களில் நிறைவுசெய்த தலவாக்கலையைச் சேர்ந்த விக்னராஜ் வக்ஷான், தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
அதேபோல, ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட அவர், 14 நிமிடங்கள் 57.71 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனிடையே, ஆண்களுக்கான 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட புசல்லவையைச் சேர்ந்த ஜெயகந்தான் பிரசான் (31:52.58 செக்.) வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இவரும் ஆண்களுக்கான 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியதுடன், 15 நிமிடங்கள் 02.55 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில், ஆண்களுக்கான 10,000 மீற்றரில் பங்குகொண்ட நுவரெலயா ஒலிஃபன்ட் தோட்டத்தைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன் (32:01.54 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
சபான், ஆஷிக், சபியா அபாரம்
ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை இராணுவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மொஹமட் சபான், போட்டித் தூரத்தை 21.05 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அத்துடன், பெண்களுக்கான குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக வலம் வருகின்ற கண்டியைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.26 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான தட்டெறிதலில் கிழக்கு மாகாணத்தின் நட்சத்திர வீரர் இஸட்.ரி.எம் ஆஷிக் வெண்கலப் பதக்கம் வென்றெடுத்தார். போட்டியில் அவர் 43.23 மீற்றர் தூரத்தை எறிந்தார்.