போரதீவுப்பற்றில் தரைவழிப்பாதைகள் தடை -288 குடும்பங்களின் 1149 பேர் இடப்பெயர்வு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய பலத்த மழை காரணமாக பிரதான குளங்கள் மற்றும் சிறிய குளங்களும் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவிய பலத்த மழை காரணமாக பிரதான குளங்கள் மற்றும் சிறிய குளங்களும் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிகின்றது.
இந்த நிலையில் மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் வெல்லாவெளி மண்டூர், மற்றும் திவுலானை வெல்லாவெளி, ஆகிய இரண்டு பிரதான வீதிகளையும் ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதனால் அந்த வீதிகளுடனான தரைவழிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
இந்தநிலையில், போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் வேத்துச்சேனை, வெல்லாவெளி, மண்டூர், கோவில்போரதீவு, முனைத்தீவு, பட்டாபுரம், பெரிய போரதீவு, பழுகாமம் உள்ளிட்ட பல கிராமங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 288 குடும்பங்களைச் சேர்ந்த 1149 பேர் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக பிரதேசத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும் பாதிப்புற்ற மக்களுக்குரிய சேவைகளை வழக்க துரித சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.