ராமேஸ்வரம் கடல் வழியாக பயணித்த 5 அகதிகள் இலங்கையில் கைது!

ராமேஸ்வரம் கடல் வழியாக பயணித்த 5 அகதிகள் இலங்கையில் கைது!

இலங்கையிலிருந்து அகதிகளாக சென்று முகாமில் தங்கியிருந்த, 5 பேர் ராமேஸ்வரம் கடல் வழியாக மீண்டும் இலங்கைக்கு சென்ற போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன் தமிழகத்திற்கு அகதிகளாக சென்று புதுக்கோட்டை, உளுந்துார்பேட்டை, கடலுார், விருதாச்சலம் ஆகிய முகாம்களில் தங்கியிருந்த, இலங்கை, வவுனியா ஆச்சிபுரம் விக்னராஜ் துஷாந்தன் - 37, தலைமன்னார் செலஸ்டின் சுரேஷ்குமார் - 39 உட்பட ஐந்து பேர் ராமேஸ்வரத்தில் இருந்து கடல் வழியாக நேற்று முன்தினம் அதிகாலை இலங்கைக்கு படகில் பயணித்தனர்.

அவர்கள் தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். குற்றப்பின்னணி எதுவும் உள்ளதா என விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

ஐந்து பேரும் வேளாங்கண்ணி கடற்கரை பகுதியில் இருந்து வந்ததாக தெரிவித்துள்ளனர். 

விசாரணையின் போது மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பயணித்த அரச பேருந்து  பயணச் சீட்டையும் பறிமுதல் செய்தனர்.

இதன் வாயிலாக ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் இருந்து ஐந்து பேரும் இலங்கைக்கு பயணித்தமை உறுதியானது.

இவர்களிடம் தலைமன்னார் பொலிஸார் விசாரிக்கின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் இருந்து எப்படி சென்றனர் என, இலங்கை கடற்படையினர் கியூ பிரிவு பொலிஸாரிடம் விசாரித்துள்ளனர்.  

விசாரணைகளின் பின்னர் அவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.