7 விமான சேவைகள் இன்று ரத்து

7 விமான சேவைகள் இன்று ரத்து

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணிக்கவிருந்த 7 விமான சேவைகள் இன்று ரத்தாகியுள்ளன.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் 6 விமான சேவைகள் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமானவை என விமான நிலைய தகவல் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, இன்று அதிகாலை 1.10 அளவில் பெங்களூர் செல்லவிருந்த யு.எல்.173 என்ற விமானம், தாய்லாந்தின் பேங்கொக் நோக்கி 1.15 அளவில் செல்லவிருந்த யு.எல். 402 என்ற விமானம் என்பன ரத்தாகியுள்ளன.

இவைதவிர, இந்தியாவின் மும்பை நோக்கி இன்று அதிகாலை 5.10 அளவில் பயணிக்கவிருந்த யு.எல்.143 என்ற விமானமும், சவூதி அரேபியா நோக்கி காலை 6.30 அளவில் பயணிக்கவிருந்த விமானம் ஒன்றும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லவிருந்த விமானம் ஒன்றும் ரத்தாகியுள்ளன.

அத்துடன் சென்னை நோக்கி பயணிக்கவிருந்த எஸ்.ஜி.002 என்ற விமான சேவையும் ரத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், விமானங்கள் ரத்தாகியமையினால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கோருவதாக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தில் பல பிரச்சினைகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி தொழில்நுட்ப கோளாறு, விமானங்களுக்கான உதிரிப்பாகங்களுக்கான

தட்டுப்பாடு மற்றும் சேவையாளர்களுக்கான பற்றாக்குறை என்பனவும் அவற்றில் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல மாதங்களுக்கு முன்னர், குறித்த விமானங்களுக்கான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டமையினால் அது தற்போது பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.