அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் – டிரம்பின் எச்சரிக்கை!

அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் – டிரம்பின் எச்சரிக்கை!

அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் என்று முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு கடும்  கண்டனம் எழுந்துள்ளது.

அமெரிக்காவில் நடப்பாண்டு இறுதியில் ஜனாதிபதி  தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில்  தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு  டிரம்ப் மீண்டும் நேரடியாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில், ஓஹியோ மாகாணத்தில் உள்ள  வேண்டாலியா நகரில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய டிரம்ப், மெக்சிகோவில் சீன நிறுவனம் கார் தயாரிப்பதை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் இங்கு கார்களை  சீனா விற்க  வந்தால் கடுமையாக எதிர்க்கப்படும் என்று தெரிவித்தார். மீறி அது நடந்தால், தான் ஆட்சிக்கு வந்ததும்  சீன தயாரிப்பு கார்களுக்கு 100% வரி விதிக்கப்படும் என்றார்.

ஒருவேளை தேர்தலில் தன்னை வெற்றிபெற வைக்காவிட்டால் அமெரிக்காவில் ரத்த ஆறு ஓடும் என்று எச்சரித்தார். முன்னாள் அதிபரான டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்கா மட்டும் இன்றி உலக நாடுகளிடையே  அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், எதிர்வரும் தேர்தலில் தான் வெற்றி பெறவில்லை என்றால், அமெரிக்காவில் இனி தேர்தலே நடக்காது என்றும் கூறினார்.கடந்த 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை தாக்கியதை போன்று, டிரம்ப்  மீண்டும் வன்முறைக்கு திட்டமிடுவதாக  ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேலும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையில்  டிரம்பின் பேச்சு அமைந்துள்ளதாகவும்  அவரின் இந்த பேச்சுக்கு எதிர்வரும் ஜனாதிபதி  தேர்தலில் அவரை மீண்டும் தோற்கடித்து அமெரிக்க மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்றும் பைடன் தெரிவித்தார்.