மீண்டுமொரு சிறுமி மீது தாக்குதல் - தாயின் இரண்டாவது கணவர் கைது!
ஹோமாகமை - மீகொடை பகுதியில் ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சந்தேகநபரை மீகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் இராணுவ கோப்ரல் தரத்தைக் கொண்டவர் எனவும் அவர் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின் பகையாளர்கர்ளுடன் குறித்த சிறுமி உரையாடியாடியதாகவும், அதனை மறைத்தமையால் சிறுமி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மையில் முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் 04 வயது சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த விடயம் அனைவர் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
சம்பவத்துடன் தொடர்புடைய குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்று சில தினங்களிலேயே அதேபோன்ற மற்றொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி பொலிஸாரினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளர்.
புத்தல பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட 14 வயதான சிறுமியொருவரை இவ்வாறு பாதாள அறையொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில், மீட்டுள்ளனர்.
குறித்த சிறுமியை நேற்று மதியம் மீட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
புத்தல – கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றிற்கு கடந்த 9ம் திகதி வந்த மூன்று இளைஞர்கள், சிறுமியின் தந்தை மீது தாக்குதல் நடத்தி, சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.
சிறுமியை காதலிப்பதாக கூறும் 20 வயதான இளைஞனினாலேயே இந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்;.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், சிறுமியை பொலிஸாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணைகளில், பிரதான சந்தேகநபருடன் வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதையடுத்து, பொலிஸார் சந்தேகநபர்களிடம் நடத்திய மேலதிக விசாரணைகளில், சிறுமி மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் இடம் தொடர்பான தகவல்களை அறிய முடிந்துள்ளது.
புத்தல பகுதியிலுள்ள பிரதான சந்தேகநபரின் உறவினர் ஒருவரின் வீட்டில் நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த ஒரு பாதாள அறையிலேயே சிறுமி மறைத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார், சிறுமியை மீட்டுள்ளனர்.
சிறுமியை மறைத்து வைக்கும் நோக்கில், ஒரு மாதத்திற்கு முன்பே இந்த அறை நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
ஐந்து அடி உயரமும், ஆறு அடி அகலமும் கொண்ட இந்த அறையில், காற்றோட்டத்திற்காக இரண்டு துளைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த பாதாள அறையும், அங்கு சிறுமி இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நிலக்கீழ் பாதாள அறையிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணொளி - நன்றி வீரகேசரி