சர்வதேச நாணய நிதியத்தின் உள்ளடக்கம் தொடர்பில் அவதானம்!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் தாம் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி செயலாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறுப்புள்ள தரப்பு என்ற ரீதியில் கருத்துகளை தெரிவித்து நாட்டுக்கு நன்மை பயக்கும் ஒப்பந்தமொன்றை தயாரிக்கும் நோக்கில் தமது கட்சி ஆரம்பம் முதலே அதன் உள்ளடக்கம் தொடர்பில் அவதானம் செலுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் நாடாளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு முன்பு சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக அரசாங்கம் பலமுறை உறுதியளித்த போதிலும், முதன்மை மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரதாரர்களின் தலையீட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதையும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை தெளிவான நோக்கமற்றது எனவும் நல்ல நோக்கத்துடன் செய்யப்பட்டதல்ல எனவும் ஜனாதிபதியின் செயலாளருக்கான எதிர்கட்சித் தலைவரின் செயலாளரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்தின் இந்தக் கலந்துரையாடலில் தேசிய மக்கள் சக்தியும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளது.
அதேநேரம், குறித்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பங்குபற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.