அவுஸ்திரேலிய விசா தொடர்பில் வெளியான அறிவித்தல்!

அவுஸ்திரேலிய விசா தொடர்பில் வெளியான அறிவித்தல்!

அவுஸ்திரேலிய அரசாங்கம் ஜூலை 1 ஆம் திகதி முதல் விசா விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கியிருந்து மாணவர் விசா பெரும் வாய்ப்பு இழக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

போர் மோதல்கள் மற்றும் வறுமை காரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி செழிப்பைத் தேடி பணக்கார நாடுகளில் தஞ்சம் அடைகிறார்கள்,அதே நேரத்தில் ஏராளமான மக்கள் வெற்றிகரமான எதிர்கால நம்பிக்கையுடன் வளர்ந்த நாடுகளில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை நாடுகின்றனர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் பல குடியேற்றவாசிகள் சட்டரீதியாகவும், சட்டவிரோதமாகவும் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கின்றனர்.

இந்த நிலையில், உயர்கல்விக்காக வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  

இதன்படி, அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த ஆண்டு தனது விசா விதிகளை கடுமையாக்கும் திட்டங்களை அறிவித்தது மற்றும் 2025 க்குள் நாட்டிற்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க இலக்கு நிர்ணயித்தது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவில் 2023 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜூன் 1 ஆம் திகதி வரை, சுற்றுலா விசாவில் வந்து மாணவர் விசாவிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 36,000 ஐ கடந்துள்ளது.

மேலும், தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பது 2022/23 இல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது நாட்டின் மாணவர் விசா நடைமுறையை சீர்குலைப்பதாகவும், உயர்கல்வி பெறும் உண்மையான நோக்கத்துடன் நாட்டிற்கு வரும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்காலிக பட்டதாரி விசாவின் கீழ் பட்டப்படிப்புக்குப் பிறகு பணிபுரியும் நேரத்தைக் குறைக்கவும், விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 50 முதல் 35 ஆகக் குறைக்கவும், ஆங்கில மொழித் திறனை உயர்த்தவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.