பௌத்த மத கருத்துக்களை திரிபுபடுத்தி பிரசாரம் செய்த “அவலோகிதேஸ்வர” விளக்கமறியலில்
பௌத்த மத கருத்துக்களை திரிபுபடுத்தி பிரசாரங்களை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவலோகிதேஸ்வர எனப்படும் மஹிந்த கொடிதுவக்கு என்ற நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்ட அவர் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று பிரசன்னப்படுத்தப்பட்டார்.
அதன்போது, குறித்த சந்தேகநபரை அங்கொட தேசிய மனநல மருத்துவ நிறுவகத்திற்கு அனுப்பி, எதிர்வரும் 24ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையை வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலிப பீரிஸ் சந்தேகநபர் உளநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தண்டனையளிப்பதற்கு பதிலாக அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென மன்றுரைத்தார்.
அத்துடன், குறித்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு அமெரிக்க முகாமில் அதிகாரிகளின் நாய்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், பின்னர் விசா இன்றி 4 ஆண்டுகள் எகிப்தில் இருந்து 450 அமெரிக்க டொலர்கள் அபராதம் செலுத்தி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார் எனவும் சிரேஷ்ட பிரதி மன்றாடியார் நாயகம் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, எவருக்கும் பௌத்த சிந்தனைகள் இருக்கலாம் எனவும், சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலின் கீழ் பணம் ஈட்டியிருந்தால் அவற்றைத் தடை செய்ய முடியும் மன்றத்தில் கோரியிருந்தார்.
எவ்வாறாயினும், இரு தரப்பு வாதங்களையும் பரீசீலித்த நீதவான் சந்தேக நபர் மனக் குழப்பத்துடன் இருப்பதாகவும், அவர் விடுவிக்கப்பட்டால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, அவரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.