மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் பானைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்!

மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் பானைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம்!

கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் இன்றைய பட்டிப்பொங்கல் நாளினை கரிநாளாக பிரகடனப்படுத்தி மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் பானைகளை ஏந்தியவாறு மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரை பண்ணையாளர்களின் போராட்டம் 124 நாள் கடந்துள்ளது.

இந்தநிலையில்,  124 பானைகளை கறுப்பு நாடாவினால் கட்டி அவற்றை தலைகளில் ஏந்தியவாறு காந்திபூங்காவிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்று, மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பண்ணையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் மாவட்ட செயலகத்துக்குள் பிரவேசிப்பதற்கு பண்ணையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், செயலகத்துக்கு வெளியே மாவட்ட அரசாங்க அதிபர் பண்ணையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார்.

இதனையடுத்து, மாவட்ட செயலகத்தினுள் இடம்பெற்ற மற்றுமொரு கலந்துரையாடலொன்றில், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிலர் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, பண்ணையாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.முரளிதரன் இதன்போது உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.