இலங்கையில் தலைமறைவாக வாழும் பிரித்தானிய யுவதி - சட்டவிரோத விசாவில் வந்தாரா?
இலங்கையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய சமூக ஊடகப் பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13 மாதங்கள் இவ்வாறு தலைமறைவாக உள்ள நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
35 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser), தங்கியிருந்த இடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது அவர் சட்டவிரோத விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை பகிரத் தொடங்கியதன் பின்னரே, அதிகாரிகள் தமது வீட்டை சோதனையிட்டதாக கெய்லீ ஃப்ரேசர்; தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்
இலங்கையின் உயர்நீதிமன்றம், அதிகாரிகள் பிறப்பித்த நாடுகடத்துதல் உத்தரவை உறுதி செய்தது
எனினும் நாட்டின் மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில், இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தாம் பயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் பிரித்தானியாவின் வடகிழக்கு ஃபைஃபா (Fifa) பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெண்டி சேம்பர்லெய் (Wendy Chamberlai) நாட்டின் வெளியுறவு அலுவலக அதிகாரிகளை சந்திப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவர், கெய்லீ ஃப்ரேசர் இலங்கையை விட்டு வெளியேற உத்தரவாதம் அளிக்கப்படுவார் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழியை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.