மின்சார கட்டண அதிகரிப்பால் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும்?

உத்தேச மின்சார கட்டண அதிகரிப்பு இடம்பெறுமாயின் அதன் ஊடாக தொழிற்சாலைகள் பாதிக்கப்படும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மின்சார கட்டண அதிகரிப்பால் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும்?

அதனடிப்படையில் உற்பத்தி பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க   தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து மின்கட்டணத்தை மீள்திருத்தம் செய்வதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மின்கட்டண திருத்தம் இடம்பெறவுள்ள முறைமை தொடர்பில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்ளுக்கு இடையேயான திட்டமிடப்பட்ட செலவீனங்கள் அதிகரித்துள்ளதாக மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

நீர் மின்னுற்பத்தியின் வீழ்ச்சி மற்றும் நிலக்கரி ஊடான மின்னுற்பத்தியின் வீழ்ச்சி என்பன காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் மின்சார கட்டண திருத்த யோசனையை அவசரமாக பரிசீலிக்குமாறு அமைச்சரவை சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டண திருத்தத்தை இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.  

உத்தேச புதிய மின்சார கட்டண திருத்தத்தின் யோசனைக்கு அமைய, தற்போதைய மாதாந்த மின்சார கட்டணத்துடன் 22 சதவீதத்தை இணைப்பதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

அவ்வாறு இல்லாவிட்டால் 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு அறவிடப்படும் 10 ரூபாய் என்ற அலகொன்றுக்கான கட்டணத்தை 18 ரூபாவாகவும், 31 முதல் 60 அலகுகளுக்கான கட்டணத்தை 25 ரூபாவிலிருந்து 33 ரூபாவாகவும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் இது தொழிற்துறையினரை வெகுவாக பாதிக்கும் என மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.