தபால் தொழிற்சங்கம் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு!

தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியாக 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.

தபால் தொழிற்சங்கம் 48 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பு!

முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் அலுவலகங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தபால் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

தபால் சேவைகளை தடையின்றி முன்னெடுத்து செல்ல வேண்டியதன் அவசியத்தை கருத்திற் கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் அனைத்து தபால் பணியாளர்களினது விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகங்களை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தபால் பணியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தபால் பணியாளர்கள் தயாராக உள்ளதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.