ஆட்டக்களத்தை தெறிக்க விட்ட க்ளென் மெக்ஸ்வெல் - தனியொருவனாக 201 ஓட்டங்கள்!
ஐசிசி உலகக் கிண்ணத் தொடரில் இன்றைய போட்டியில் ஆட்ட நாயகனாக களத்தை தெறிக்கவிட்ட க்ளென் மெக்ஸ்வெல் தனியொரு வீரராக இருந்து இரட்டைச் சதங்களை பெற்று அவுஸ்ரேலிய அணிக்கு வலு சேர்த்தார்.
இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களை பெற்றது.
இதன்போது, இப்ராஹிம் ஷட்ரான் ஆட்டமிழக்காது 143 பந்துகளில் 129 ஓட்டங்களைப் பெற்றார்.
292 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.
இதன்போது க்ளென் மெக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 128 பந்துகளில் 201 ஓட்டங்களை பெற்று களத்தை விறுவிறுப்பாக்கினார்.
ஏனைய அனைத்து வீரர்களும் ஒருசேர பெற்ற ஓட்டங்களைப் போன்று இரண்டு மடங்கு ஓட்டங்களை குவித்தமை சிறப்பம்சமாகும்.
இதேவேளை, பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன், 2023 ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இடது கை விரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இந்த தொடரிலிருந்து விலகியுள்ளதாக பங்களாதேஷ் அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நேற்று இடம்பெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பெடுத்தாடியபோது, அவர் உபாதைக்குள்ளானார்.
இந்தநிலையில், உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் எதிர்வரும் போட்டிகளில், பங்களாதேஷ் அணியை, உப தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ வழிநடத்தவுள்ளார்.
அத்துடன், உபாதைக்குள்ளாகியுள்ள ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக அனமுல் ஹக் அணியில் இணைந்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.