உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் மறைத்தார், ரணிலும் மறைக்கிறார். நாம் எப்படியாவது உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்!

நாட்டின் அரசியல் முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என நாட்டு மக்கள் கோரும் வேளையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் அரசியலாக்காது முழுமையான உண்மையைத் தேடுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசாங்கம் உண்மைகளையும் தரவுகளையும் மறைப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமக்கும் சரியான உண்மைகள் தெரியாது என்பதனால், இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறே எதிர்க்கட்சி கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

இங்கு உண்மையை மறைப்பது என்பதிலிருந்து கைகளில் இரத்தம் தோய்ந்த நபர்களின் சதியோ என்று சந்தேகம் எழுகிறது என்றும், இந்த தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இருந்தபோதும், இங்கு உண்மை மறைக்கப்படுவது மாத்திரம் இடம் பெற்றுள்ளதால் அரசியல் சாதகங்களைப் பொருட்படுத்தாமல், முழுமையான உண்மையை இங்கு வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் நேற்று (18) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளையும் ஏனைய காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக அளித்த வாக்குறுதிகளின் பிரகாரமே ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 இலட்சம் மக்கள் ஆணை கிடைத்தாலும், அவர் உண்மையைக் கண்டறியாமல்

பயங்கரவாத செயலை விசாரித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் பலரையும் அந்த நடவடிக்கைகளில் இருந்து நீக்கினார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகளை பார்க்கும் போது உண்மையை தேடுவதை விட உண்மை மறைக்கப்பட்டுள்ளதையே அவதானிக்க கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக உண்மையைக் கண்டறியும் பொறுப்பைக் கூட கோட்டாபய ராஜபக்ச புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவ்வாறே, தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும், கோட்டாபய ராஜபக்சவைப் பின்பற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை மறைத்து வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நேர்மையான, நம்பகமான, பக்கச்சார்பற்ற தேசிய விசாரணையைத்தான் தாம் விரும்பினாலும், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, தேசிய விசாரணைகளில் அதிக நம்பிக்கை இல்லை என்றும், இவ்வாறான நிலையில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முதல் பாகம் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்த போதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் குறைந்தபட்சம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரால் பரிசீலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையில் மாத்திரம் அதனை பரிசீலிக்க சந்தர்ப்பம் வழங்குவதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கூட மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கம் நியமித்துள்ள புதிய குழுவிற்கு இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும் கர்தினால் அவர்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு புதிய குழுக்களை நியமிப்பதாலும் கூட உண்மை மூடி மறைக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான தாக்குதலுக்கு இந்நாட்டில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த தீவிரப் போக்கு உடையவர்களும் பொறுப்பாளிகள்.

இந்த தீவிரவாதிகளால் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பறிபோனது என்றும்,இந்த தாக்குதலின் உண்மை கண்டறியப்படாத வரை,இது தேசிய பாதுகாப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையில் உள்ள நம்பமகற்ற தன்மையையும் சந்தேகத்தையும் நீக்க உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.