வர்த்தகர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை! 1977

VAT என்ற போர்வையில் பொருட்களின் விலையை நியாயமற்ற வகையில் உயர்த்தும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தகர்களுக்கு  நுகர்வோர் விவகார அதிகார சபை  எச்சரிக்கை! 1977

VAT வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சில வர்த்தகர்கள் பொருட்களின் விலையை அதிகரித்துள்ளதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் VAT எனப்படும் பெறுமதி சேர் வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான திருத்தச் சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, ஏற்கனவே 15 சதவீத VAT வரி விதிப்புக்கு உட்படும் பொருட்களுக்கு மேலும் 3 சதவீதமும், முன்னதாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த சில பொருட்களுக்கு புதிதாக 18 சதவீத VAT வரியும் விதிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், குறித்த VAT வரி அமுலாவதற்கு முன்னதாகவே நியாயமற்ற வகையில் பொருட்களின் விலையை அதிகரித்துள்ள வர்த்தகர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க 1977 என்ற துரித தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடு முழுவதும் சோதனைகளை முன்னெடுத்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.