விவசாயிகளிடம் 500 கோடி ரூபாய் மோசடி  - சந்தேகநபர் விளக்கமறியலில்!

விவசாயிகளிடம் 500 கோடி ரூபாய் மோசடி  - சந்தேகநபர் விளக்கமறியலில்!

 
அனுராதபுரம் - கலென்பிந்துனுவௌ பகுதியைச் சேர்ந்த விவசாயிகளிடம் அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 500 கோடி ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். 

அதன்போது, சந்தேக நபரையும் அவருடன் கைதான பெண்ணையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கண்டி - பிலிமத்தலாவ பகுதியில் விடுதியொன்றில்  தலைமறைவாகியிருந்த சந்தேக நபரையும், அவருடன் இருந்த நடிகை என கூறப்படும் பெண் ஒருவரையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

குறித்த பணத்தில் 39 வயதான சந்தேக நபர் கலென்பிந்துனுவௌ, அனுராதபுரம், கடவத்தை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ட்ரேட்வின் என்ற நிதி நிறுவனம் ஊடாக சந்தேகநபர் மேற்கொண்ட நிதி மோசடிகள் தொடர்பில் பொலிஸாருருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மோசடியாக உழைத்த பணத்தையும் சந்தேக நபர் இணையத்தில் பணம் ஈட்டும் அமைப்பில் வைப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், அவரது வங்கிக் கணக்குகளை சோதனையிடுமாறும் பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.