ஹரக் கட்டாவை தப்பிக்க வைக்க இரசாயன ஆயுத தாக்குதல் திட்டம் - வெளியான தகவல்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தடுப்பு காவலில் உள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நதுன் சிந்தக எனப்படும் ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை கொமாண்டோ சீருடைகளை அணிவித்து அங்கிருந்து தப்பிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தீவிர விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹரக் கட்டாவை தப்பிக்க வைக்க  இரசாயன ஆயுத தாக்குதல் திட்டம் - வெளியான தகவல்!

இந்த நடவடிக்கைக்கு இரசாயன ஆயுதம் மூலம் தாக்குதல் நடத்துவதற்கும் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நன்கு பயிற்சி பெற்ற கொமாண்டோ சிப்பாய், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் அத்துமீறி நுழைவதற்கான திட்டத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோரை மீட்பதற்காக கொமாண்டோ பாணியிலான பயங்கரவாத தாக்குதலை நடத்தும் திட்டம் குறித்த தகவல் நேற்று வெளியானது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்ட இரண்டு முன்னாள் கொமாண்டோக்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொமாண்டோ சீருடை அணிந்த ஒரு குழு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குள் நுழைந்து, அதன் பிரதான நுழைவாயிலில் இருந்து அனைத்துப் பாதுகாவலர்களையும் தாக்கிவிட்டு குறித்த இருவரையும் தப்பிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டமை தொடர்பான பல விடயங்கள் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், அவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹரக் கட்டாவை தப்பிக்க வைக்கும் திட்டம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவிடம் நகர்த்தல் பத்திரம் ஊடாக நேற்று சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.

இதற்கமைய, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி மேலதிக அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.