உள்நாட்டில் உற்பத்தியாகாத மீன்களை மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதி - டக்ளஸ் தேவானந்தா!
இலங்கையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத மீன்வகைகளை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு கடற்றொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மீன் இறக்குமதியின் போது உரிய விலை, தரம் மற்றும் திணைக்களத்தின் சட்டங்கள் என்பன கருத்திற்கொள்ளப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் - எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று தெரிவித்தார்
அதேவேளை, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கின்ற போராட்டங்களினால் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுத்துவதை தவிர வேறு எதனையும் சாதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், "தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, பல்வேறு திணைக்களங்களினால் காணி அடையாளப்படுத்தப்படுதல், விகாரைகள் அமைத்தல், மேய்ச்சல் தரை உட்பட பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன.
தற்போதைய அரசியல் சூழலில் இவற்றையெல்லாம் சமயோசிதமான அணுகுமுறைகள் மூலமே தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை அனுபவங்களின் அடிப்படையில் நம்புகின்றேன்.
மேலும், போராடுவதற்கான உரிமை நாட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் அதை வழிநடத்துபவர்கள் எத்தகைய நோக்கத்தை கொண்டுள்ளார்கள் என்பதை பொறுத்தே இலக்கின் தன்மையும் அமையும். இதற்கு எமது உரிமைப் போராட்டம் ஒரு சான்றாகும்.
மாறாக பேச்சுவார்த்தைகள் மூலமே எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்பததை புரிந்து கொண்டே நான் ஆயுத போராளியாக இருந்து இன்று ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டு செயற்பட்டு வருகின்றேன்” என்று தெரிவித்தார்.