ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிட த.மு.கூ தீர்மானம்!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நேற்று (29) தீர்மானித்துள்ளது.
இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் தமிழ்ப் பிரதிநிதிகள் போட்டியிடவுள்ளனர்.
நுவரெலியாவில் தனது கட்சி சார்பில் 03 வேட்பாளர்களை களமிறக்க தீர்மானித்திருப்பதாக முன்னாள் எம்.பியும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் கூட்டணித் தலைவர்களிடம் தெரிவித்திருப்பதாக அறியமுடிந்தது.
நேற்றைய கூட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கனேசன் கூறியதாவது,
‘‘தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நாடு தழுவிய கூட்டு, நாடெங்கிலும் தமிழ் முற்போக்கு கூட்டணி தனித்து போட்டி ஆகிய சாத்தியங்களை நாங்கள் விரிவாக முற்பகல் முதல் மாலை வரை ஆராய்ந்தோம்.
இதன் இறுதியிலே தமிழ்க் கட்சிகளின் கூட்டு தொடர்பாக வடகிழக்கு தமிழ்க் கட்சிகளிடமிருந்து சரியான முன்மொழிவுகள் எதுவும் வரவில்லை.
இன்று வெற்றி பெற்று ஆட்சியமைத்திருக்கக்கூடிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவுக்கும் அதே போல பிரதமர் ஹரிணி அமலசூரியவுக்கும் எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளும், அதே வேளையிலே இந்நாட்டின் மிகவும் பின்தங்கிய மக்களாக அரசியல் சமூக கலாசார தரவுகளில் குறியீடுகளில் மிக வளர்ச்சி கொண்ட குன்றிய நிலையிலே இருக்கின்ற மக்களை பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சியாக நாங்கள் எங்களது மக்களின் அபிலாஷைகளை தேசிய அரங்கிலும் சர்வதேச அரங்கிலும் தொடர்ந்து முன்வைக்கவிருக்கிறோம்.
இந்நிலையிலே மலையகத்திலே இருக்கக்கூடிய முற்போக்கு அணி எது பிற்போக்கு அணி எது என்பது தொடர்பாக தெளிவுகளை தேசிய மக்கள் சக்தி கட்சியும் அரசாங்கமும் பெற்றுக்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம். மலையகத்தின் பிரதான 04 கட்சிகளிலே 03 கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் முற்போக்குக் கூட்டணியை அமைத்து கடந்த 10 வருடங்களாக கடுமையாக போராடி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
2003 ஆம் வருடத்திலே குடியுரிமை பெற்ற எமது சமுதாயம் கடந்த 20 வருடங்களாகத்தான் ஓட்டப்பந்தயத்திலே ஓடிக்கொண்டிருக்கின்றது.
ஆகவே இதன் பின்தங்கிய வளர்ச்சிக்கு காரணம் வெறுமனே மலையக அரசியல் தலைமைகள் மட்டுமல்ல அதை விட இதன் நடுவிலே ஓங்கியிருக்கின்ற பேரினவாதமாகும்.
அந்த பேரினவாதத்துக்கு எல்லா கட்சிகளும் பங்களிப்பு வழங்கியிருக்கின்றன. இதனாலேயே நாங்கள் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையிலே மலையக மக்களின் சகல விடயங்களையும் தழுவிய மலையக சாசனமொன்றை உருவாக்கியுள்ளோம். அந்த ஆசனத்தின் அடிப்படையிலே எமது மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்’’ என்றார்.