7 குழந்தைகளின் உயிரை பறித்த டெல்லி மருத்துவமனை விபத்து!
டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மருத்துவமனை தீயணைப்பு துறையின் என்ஓசி சான்று இல்லாமல் செயல்பட்டு வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்து வரும் நிலையில், தீ விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
நேற்று டெல்லியில் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி முழுவதையும் புகை மண்டலமாக மாற்றியது.
கிழக்கு டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தை மருத்துவமனையில் இரவு 11.32 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டடுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து 12 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 7 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன.
மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு வென்டிலேட்டரில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல டெல்லியின் ஷாஹ்தாரா பகுதியிலும் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இங்குள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த தீயை அணைக்க 5 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கட்டிடத்திலிருந்து 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் இந்த மருத்துவமனை தீயணைப்பு துறையின் என்ஓசி சான்று இல்லாமல் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் நவீன் கிச்சி மீது டெல்லி போலீஸ் ஐபிசி பிரிவு 304A, 336 மற்றும் 34 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இது குறித்து பேசிய டெல்லி தீயணைப்பு துறை தலைவர் அதுல் கார்க் கூறுகையில், “இந்த மருத்துவமனைக்கு தீயணைப்பு துறை சார்பில் என்ஓசி சான்று வழங்கப்படவில்லை.
எனவே இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தீ விபத்து ஏற்பட்ட விவேக் விஹார் பகுதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் என்ஓசி ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.
ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததன் மூலம் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் பொலிஸார் இது குறித்து உறுதி செய்யவில்லை.
வடமாநிலங்களில் குறிப்பாக டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது.
எனவே தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், விபத்து ஏற்பட்டால் அதை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.