சிங்கள பௌத்த பிக்குகளுடன் கூட்டுப் பிரகடனம் - புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அதிருப்தி!

இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு முயற்சி ஒன்றில், உலகத் தமிழர் பேரவை, சிங்கள பௌத்த பிக்குகளுடன் ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளமை தொடர்பில், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

சிங்கள பௌத்த பிக்குகளுடன் கூட்டுப் பிரகடனம் - புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அதிருப்தி!

அந்த வகையில் இலங்கைக்கு பரிந்துரைக்கப்படுவதற்கான யோசனைகள் தொடர்பில் அவை தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தமிழ் காடியன் செய்தி வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலைக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் தமிழர் தாயகத்தில் சர்வதேச கண்காணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இரண்டு யோசனைகளை இந்த அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் கருத்துக்களுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் இந்த வலியுறுத்தலை இன்று காலை அறிக்கையாக வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னதாக இடம்பெற்ற  கலந்துரையாடல்களில் சிவில் சமூகத் தலைவர்கள், சமயப் பிரமுகர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்கள் உட்பட கல்விசார் சமூகப் பிரதிநிதிகள் பங்குபற்றியுள்ளனர்.

1948 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கைத் தீவின் வடகிழக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களும் அவர்களது சந்ததியினரும் தமிழர்களின் நியாயமான அபிலாiஷகளைப் பூர்த்தி செய்து நிரந்தர அரசியல் தீர்வைக் காண அனுமதிக்கும் சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

தற்போதுள்ள அதிகப்படியான இராணுவ பிரசன்னம் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக தீவின் வடகிழக்கு பகுதியில் ஒரு இடைக்கால சர்வதேச பாதுகாப்பு பொறிமுறையை நிறுவ வேண்டும்.

மக்களுக்கு அரசியல் உரிமைகளை சுதந்திரமாக வழங்குவதற்காக இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல், தண்டனை வழங்குதல் மற்றும் சித்திரவதைக்கு எதிரான மாநாட்டின் கீழ் சர்வதேச நீதிமன்றத்தின் முன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

இந்தநிலையில் தமிழர்களின் இந்த அபிலாiஷகளை புரிந்து கொண்டு, அதனை  அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிங்கள-பௌத்த மதகுருமார்கள் மற்றும் தெற்கு சிவில் சமூகத்தை தாம் கேட்டுக்கொள்வதாக சர்வதேச தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

அத்தகைய முற்போக்கான நடவடிக்கையே, அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை நோக்கிய கணிசமான மாற்றத்தை எடுத்துக்காட்டும்.

அத்துடன் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைக் காண்பதற்கும், ஒரு நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான இலங்கையை உருவாக்கவும் வழிவகுக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை பௌத்த பிக்குகளுடன் உடன்படிக்கையை செய்துள்ள உலக தமிழர் பேரவை, ஒரு காலத்தில் கொண்டிருந்த தமிழர் பிரதிநிதித்துவத்தை இப்போது கொண்டிருக்கவில்லை என்று புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

தற்போது அந்த அமைப்பில் கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் நோர்வேயின் தமிழ் பேரவை என்ற இரண்டு தனிப்பட்ட அமைப்புக்கள் மாத்திரமே இணைந்துள்ளன.

எனினும் உலகத் தமிழர் அமைப்புகளில் பெரும்பாலானவை உலக தமிழர் பேரவையில் இருந்து பிரிந்துவிட்டன. 
அத்துடன் பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் மற்றும் யுஎஸ்டிபிஏசி என முன்னர் அறியப்பட்ட அமெரிக்காவின் தமிழ் நடவடிக்கை குழு (யு.எஸ்.டி.ஏஜி) போன்ற அமைப்புகளும் உலக தமிழர் பேரவையில் இருந்து வெளியேறியுள்ளன.

இதன் விளைவாக, பௌத்த பிக்குகளுடன் செய்துக்கொள்ளப்பட்டுள்ள பிரகடனத்தின் எந்தவொரு விளைவும் பெரும்பான்மையான தமிழ் புலம்பெயர்ந்தோரின் ஆதரவைக் கொண்டிருக்கவில்லை.

அத்துடன் குறைந்த முக்கியத்துவம் மற்றும் நம்பகத்தன்மையையே கொண்டிருப்பதாக தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளதாக தமிழ் காடியன் தெரிவித்துள்ளது.