பெண்கள் பிரிமியர் லீக் - ஓரங்கட்டப்பட்ட இலங்கையின் சிறப்பு வீராங்கணை!
உலகளவில் 20க்கு 20 லீக்குகளில் பெரிதும் பேசப்பட்ட இலங்கை வீராங்கனையான சாமரி அதபத்து, பெண்கள் பிரிமியர் லீக் ஏலத்தில் எந்தவொரு கிரிக்கட் அணி உரிமையாளர்களாலும் வாங்கப்படாமை வியப்பான விடயம் என பல தரப்பினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நேற்று மும்பையில் இடம்பெற்ற ஏலத்தில் சாமரி அதபத்து, விற்கப்படாமல் போனமை குறித்து முன்னாள் இந்திய அணி தலைவி அஞ்சும் சோப்ரா ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய அனைத்துத்துறை வீராங்கனை அனாபெல் சதர்லேண்ட் மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் காஸ்வீ கௌதம் ஆகியோர் முறையே டெல்லி கேப்பிடல்ஸ் (டி.சி) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (ஜி.ஜி) ஆகிய அணிகளால் தலா 2 கோடி ரூபாய்க்கு அதிக ஏலத் தொகைக்கு வாங்கப்பட்டனர்.
மற்றொரு இந்திய வீராங்கனையான கர்நாடகாவைச் சேர்ந்த விருந்தா தினேஸை யு.பி வொரியர்ஸ் அணி நிர்வாகம் 1.3 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இருப்பினும், இந்த நிகழ்வின் மிகப்பெரிய ஆச்சரியங்களில் ஒன்று, உலகளவில் 20க்கு 20 லீக்குகளில் தேடப்படும் வீராங்கனையாக இருந்த போதிலும், சமாரி விற்பனையாகாமல் போனமையாகும்.
அத்துடன் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், அவுஸ்திரேலிய அனைத்துத்துறை வீராங்கனை கிம் கார்த் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் டியான்ட்ரா டாட்டின் ஆகியோரும் ஏலத்தில் விற்பனையாகாமல் போன ஏனைய குறிப்பிடத்தக்க வீராங்கனைகளாவர்.
சாமரி, தனது துடுப்பாட்டம் மற்றும் அனைத்துத்துறை செயல்திறன் மூலம் மக்கள் சொல்லும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராவார்.
எனினும் அவர் ஏலத்தில் வாங்கப்படாமை நியாயமற்றது என்று அஞ்சும் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இவரைப் போன்ற அனைத்துறைத் திறன் கொண்ட ஒரு வீராங்கனை விற்பனையாகாமல் போவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாமரி, 122, 20க்கு 20 போட்டிகளில், 22.65 சராசரியுடன் 2,651 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
அவர் ஒரு சதம் மற்றும் எட்டு அரைசதங்களை பெற்றுள்ளார். அத்துடன் அவரது சிறந்த ஓட்ட எண்ணிக்கை 113 ஆகும்.
சாமரி உலகளவில், இங்கிலாந்தில், அஸ்திரேலியாவின் பெண்கள் பிக் பாஷ் லீக் மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரீமியர் லீக் மற்றும் இந்தியாவின் பெண்கள் 20க்கு 20 சவால் கிண்ணம் ஆகியவை உட்பட்ட அதிக போட்டிகளில் விளையாடியுள்ளார்.