தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?
அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான உயர் நீதிமன்றத் தீர்ப்பை, நடைமுறைப்படுத்துவதில் சட்டசிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தடையை நீக்கும் வகையில் குறித்த தீர்ப்பின் சட்டசிக்கல் விடயங்கள் மீண்டும் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

2010 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பின்னர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம் நபர் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறிய நான்கு அதிகாரிகளில் ஒருவராக தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றத்தினால் அடையாளம் காணப்பட்டார்.
இதனையடுத்து அவருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுங்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எவ்வாறாயினும், அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்துடன் மூன்று மாதங்களுக்கு தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக இத்தகைய நடவடிக்கை எடுப்பதில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, சட்டச் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பின் 41 ஆவது சரத்தின் இ (1) பிரிவுக்கமைய, ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் அரசியல் அமைப்பு பேரவையின் அங்கீகாரத்துடன் மட்டுமே பொலிஸ் மா அதிபர் பதவிக்கான வெற்றிடம் நிரப்பப்படுகிறது.
எவ்வாறாயினும், 41 ஆவது சரத்தின் இ (2) பிரிவுக்கமைய, பதில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட அலுவலரின் பதவி, அவர் நியமிக்கப்பட்டு 14 நாட்களுக்கு பின்னரே, அந்த பதவி பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோனின் நியமனம் மூன்று மாதங்களுக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நியமனம் ஏற்கனவே நிரந்தரமாக கருதப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
21வது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, பொலிஸ் மா அதிபர் தவிர்ந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றங்கள், ஒழுக்காற்றுக் கட்டுப்பாடு மற்றும் பணிநீக்கம் ஆகியவற்றில் ஆணைக்குழு பரந்த அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
இந்தநிலையில், பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க சட்டரீதியாக அதிகாரம் உள்ளதா? அத்தகைய அதிகாரம் தமக்கு வழங்கப்படாவிட்டால், அடுத்ததாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேள்விகளை எழுப்பியே, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நீதிமன்றத்தின் உத்தரவை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து தெளிவுபடுத்துமாறும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கும் கடிதம் எழுதியுள்ளது.