38 பவுண் தங்கத்தட்டை திருடிய கதிர்காமக் கந்தன் ஆலய பூசகருக்கு பிணை!
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் 38 பவுண் தங்க தட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பூசகர் ஒருவருக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்த பூசகர் இன்று (19) கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து அவர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளையில் 5 இலட்சம் ரூபாய் அடங்கலான 2 சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் அனுமதியளித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட நிலையில் இந்தியாவில் உயிரிழந்த அங்கொட லொக்கா எனப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேராவின் மனைவியினால் கதிர்காமக் கந்தன் ஆலயத்திற்கு 38 பவுண் பெறுமதியான தங்க தட்டு வழங்கப்பட்டிருந்தது.
குறித்த தங்க தட்டு காணாமல் போனதாக ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கதிர்காம ஆலயத்தின் களஞ்சியசாலைக்கு பொறுப்பாளராக இருந்த குறித்த பூசகர் கைது செய்யப்பட்டார்.