இலங்கையில் சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் சீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி கடந்த இரண்டு தினங்களில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்தனர். 

அத்துடன் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

அக்குரஸ்ஸ பகுதியில் 2 மாணவர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இதன்படி, 17 வயதான மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காலி – தவலம பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர்.

இரத்தினபுரி – எலபாத்த பகுதியில் வெள்ள நீரில் அள்ளுண்டுச் சென்ற பெண் ஒருவர் உயிரிழந்தார்.

முன்னதாக அவிசாவளை - புவக்பிட்டிய - ஹெலிஸ்டன் தோட்டப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வீடு வெள்ளத்தில் மூழ்கியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இதன்படி, 78 வயதான முதியவர் ஒருவரும் 36 வயதான அவரது மகளும் 7 வயதான சிறுமி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் புவக்பிட்டிய - ஹேவாஹின்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி 11 வயதான சிறுமி ஒருவரும் உயிரிழந்தார்.

இதேவேளை, மாத்தறை - தெய்யந்தர பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

இதன்படி, 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.