மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது!

மியன்மாரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது!

மியான்மாரை உலுக்கிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 2000ஐக் கடந்துள்ளது. மியான்மார், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று முன் தினம் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிச்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டது.

இந் நிலநடுக்கத்தால் நேபிடாவ், மண்டலே ஆகிய 2 நகரும் பெரும் சேதத்தை சந்தித்தன.

நேபிடாவில் புத்தர் கோவில் உள்பட வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. அதேபோல மண்டலே நகரில் உள்ள பழமையான அரண்மனையும் இடிந்தது.

நிலநடுக்கத்தால் தரைமட்டமான கட்டிடங்களில் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர். படுகாயம் அடைந்தனர்.

ஒட்டு மொத்த நாட்டையும் நிலநடுக்கம் உலுக்கியதை தொடர்ந்து மியான்மார் இராணுவ அரசாங்கம் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.

அதோடு நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளை அரசு முடுக்கிவிட்டது. எனினும் ராணுவம்-கிளர்ச்சி குழுக்கள் இடையேயான மோதல் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை சிக்கலாக்கி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மியான்மரை புரட்டிப்போட்ட இந்த பயங்கர நிலநடுக்கம் அதன் அண்டை நாடுகளில் ஒன்றான தாய்லாந்திலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.

தலைநகர் பாங்காக் உள்பட தாய்லாந்தின் பல நகரங்களை நிலநடுக்கம் தாக்கியது. அங்கும் வானுயுர கட்டிடங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தாய்லாந்திலும் நிலநடுக்கம் பாதித்த அனைத்து பகுதிகளிலும் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந் நிலையில் மியன்மார் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்துக்கு 150-க்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன.

தற்போது மியன்மாரில் மட்டுமே பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நிலநடுக்கத்தால் மோசமான பாதிப்பை சந்தித்துள்ள மியான்மருக்கு உலக நாடுகள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related