வடக்கில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்!

வடக்கில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், தமிழ்ப் பொதுவேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று(23) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், சக்கோட்டை, கொடிமுனையில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது, தமிழ் பொது வேட்பாளர் பாக்கிய செல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட குழுவினர் பிரசார துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்துள்ளனர்.

இந்த பிரசார பயணம் தொடர்ந்து பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி, தொண்டைமாணாறு, வளலாய், பலாலி, தையிட்டி, காங்கேசன்துறை ஆகிய இடங்களின் ஊடாக நகரவுள்ளது.

கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து சங்குடன் இன்று(23) தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தாயகச் செயலணி என்ற அமைப்பின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் எனப்பலர் இணைந்து குறித்த பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

நிகழ்வின் முன்னதாக கிளிநொச்சி கந்த சுவாமி ஆலயத்தில் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதன்போது,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், முன்னாள் கரைச்சி பிரதேச சபையினுடைய தவிசாளர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.