கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையைில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதோடு தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கிராமங்களிலுள்ள உள்வீதிளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் உள்ளுர் போக்குவரத்துக்களின் போது பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பலத்த மழை காரணமாக கிழக்கில் சிறிய குளங்கள் நிரம்பி வழிவதோடு பிரதான பெரிய குளங்களும் வான்பாய்கின்றன.
உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி ஒரு அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 14அடி 3அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி, கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி அங்குலம், கித்துள்வெகக்குளத்தின் நீர்மட்டம் 7அடி, வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 2 அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 9அங்குலம், நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 31அடியும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம்17அடி 3அங்குலமுமாக உயர்ந்துள்ளன.
இந்நிலையில் குளங்களின் மேலதிக நீர் வெளியேற்றப்படுவதாகவும், அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்று வியாழக்கிழமை காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 62.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ரமேஸ் தெரிவித்தார்.
எனினும், நவகிரிக் குளத்தின் வான் கதவு திறக்கப்பட்டுள்ளதனால் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள தாழ்நிலங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.