ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் முறைப்பாடு செய்ய அவசர தொலைபேசி இலக்கம்
ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் நேரடியாக முறைப்பாடு தெரிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
ஓமான் பொலிஸாருக்கு சிங்கள மொழியில் நேரடியாக முறைப்பாடு தெரிவிப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மனித கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டு ஓமானில் நிர்க்கதிக்குள்ளாகும் இலங்கையர்களுக்கு உதவும் நோக்கில் அவசர தொலைபேசி இலக்கம் வழங்கப்பட்டுள்ளது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் ஓமான் அரசாங்கமும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.
அதன்படி, 0096 88 00 77 444 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும் எனவும், www.nccht.com என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்தும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
ஓமான் பொலிஸ் நிலையத்தில் ஆங்கிலம், அரபு உட்பட 12 மொழிகளில் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஓமான் அரசாங்கத்திடம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைவாக, ஆட்கடத்தல் தொடர்பான முறைப்பாடுகளை சிங்கள மொழியிலும் சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தகைய முறைப்பாட்டிற்குப் பிறகு, ஓமான் பொலிஸார் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவரை உடனடியாக நாட்டில் உள்ள ஒரு சிறப்பு பாதுகாப்பு இல்லத்தின் காவலில் வைப்பதுடன், மனித கடத்தல்காரர்களை கைது செய்து எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.