பாடசாலை மாணவிகளுக்கு பிரத்தியேக பேருந்து சேவை ஆரம்பம்!
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையில் இருந்து மகளிருக்கான பேருந்து சேவை கடந்த 21ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை செல்லும் மாணவிகள் பேருந்துகளில் செல்லும் போது இடம்பெறுகின்ற பாலியல் தொல்லைகள் தொடர்பாக மட்டக்களப்பு அருவி பெண்கள் வலையமைப்புக்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அதன் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனகன் கவனத்திற்கு எடுத்து கொண்டார்.
அவரின் நடவடிக்கைக்கு அமைவாக இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்துசாலை அத்தியட்சகர் கந்தசாமி சிறிதரனிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கல்முனை தலைமை காரியாலய பிரதான பிராந்திய முகாமையாளர் விஜித்த தர்மசேனவின் அனுமதியுடன் புதிய பேருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு பேருந்து சாலையின் பாடசாலை மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டக்களப்பில் முதல் முறையாக பாதுகாப்பான போக்குவரததை வழங்கும் பிரத்தியேக பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் காலை 06.15 ஆரம்பிக்கப்படுகின்ற பாடசாலை மாணவிகளுக்கான பேருந்து அருனோதயா, கோட்டமுனை கனிஸ்ட வித்தியாலயம், மகா ஜனா, சிசிலியா, ஆனைப்பந்தி, வின்சன்ட் உள்ளிட்ட பாடசாலைகள் ஊடாக பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.