மின் வெட்டு தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

மின் வெட்டு தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்

நாடளாவிய ரீதியிலான மின் வெட்டினை தொடர்வதா? அல்லது இல்லையா? என்பது குறித்து இன்று (13) தீர்மானிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தீர்மானத்தை இன்று காலை 10.00 மணியளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக CEB இன் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் 03 மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்தது.

இதனால், மின்சாரத் தேவையை நிர்வகிப்பதற்காக கடந்த 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஒன்றரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க CEB நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான 06 மணித்தியாலங்களில் 04 பிரிவுகளில் சுழற்சி முறையில் 90 நிமிட மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், நேற்று (12) பௌர்ணமி தினமானதால் இலங்கை மின்சார சபையினால் குறைந்த மின்தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததால் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க CEB நடவடிக்கை எடுத்திருந்தது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் செயலிழந்த நிலையில் அதன் பராமரிப்புப் பணிகளை மின் பொறியியலாளர்கள் தற்சமயம் மேற்கொண்டு வருகின்றனர்.

உரிய நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் உடனடியாக மின் பிறப்பாக்கிகளை செயற்படுத்தவுள்ளதாக CEB கூறியுள்ளது.

நாளைய தினம் (14) நுரைச்சோலை மின் உற்பத்தி கட்டமைப்பை தேசிய மின்னோட்டத்தில் இணைக்க முடியும் என இலங்கை மின்சார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.