சொக்கலட்டிலிருந்து மனித விரல் துண்டு மீட்பு - மஹியங்கனை வைத்தியசாலையில் சம்பவம்!

சொக்கலட்டுக்குள் இருந்து மனித விரல் துண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது.

சொக்கலட்டிலிருந்து மனித விரல் துண்டு மீட்பு - மஹியங்கனை வைத்தியசாலையில் சம்பவம்!

மஹியங்கனை வைத்தியசாலை பணியாளர் ஒருவரால் அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் சொக்கலட் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சொக்கலட்டை கடித்த போது அதில் நகத்துடனான மனித விரல் துண்டொன்று இருந்துள்ளது.

 குறித்த விடயம் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டினை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது மனித விரல் துண்டொன்று அதில் இருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சொக்கலட்டிலிருந்து மனித விரல் துண்டொன்று மீட்கப்பட்டுள்ளமை வரலாற்றில் முதல் தடவையாகும் என பொது சுகாதார பரிசோதகர் சமிந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரை வினவிய போது, “ ஈசிஜி தொழிநுட்பவியலாளர்களே அந்த சொக்கலட்டினை கொள்வனவு செய்துள்ளனர்.

நேற்றுதான் குறித்த முறைப்பாடு எங்களுக்கு கிடைக்கப்பெற்றது. Fruit and Nut சொக்கலட் ஒன்றினையே ஒரு தினத்திற்கு முன்னதாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

அன்றைய தினம் சொக்கலட்டில் ஒரு துண்டினை சாப்பிட்டுள்ளனர். 

எஞ்சிய பகுதியினை குளிர்சாதனப்பெட்டியில் வைத்துள்ளனர். 

எஞ்சிய பகுதியை நேற்றைய தினம் எடுத்து உண்ணும் போதே பற்களால் கடிபடாத தொகுதியொன்றை உணர முடிந்துள்ளது. 

அதனை நீரில் சலவை செய்து பார்வையிட்டுள்ளனர்.

 அது விரலின் ஒரு பகுதியினை போன்று காணப்பட்டுள்ளது.

 அதன்பின்னரே எம் ஓ எச் பிரிவினருக்கு அறிவித்துள்ளனர். 

இந்த நிலையில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அப்பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் அதனை ஆய்வு செய்துள்ளனர். 

விரலின் பகுதி என சந்தேகிக்கப்படும் துண்டினை முத்திரையிட்டு எடுத்து வைத்துள்ளனர். அதனை மகியங்கனை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளனர்.

 நீதிமன்றின் வாயிலாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

அந்த சொக்கலட்டினை தடை செய்வதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

அந்த சொக்கலட்டின் உற்பத்தி தொகுதியின் மாதிரிகளே பெறப்பட்டுள்ளன. 

நாளைய தினம் நீதிமன்றிற்கு சமர்ப்பித்து நீதவானின் உத்தரவிற்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்லவிருக்கின்றோம்.

பகுப்பாய்வு அறிக்கைக்கு அமையவும் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”. என்று அவர் தெரிவித்தார்.