ஐரோப்பிய யூனியன் உக்ரைனுக்கு 160 கோடி டொலர்கள் நிதியுதவி

ஐரோப்பிய யூனியன் உக்ரைனுக்கு 160 கோடி டொலர்கள் நிதியுதவி

முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் லாபத்தைக் கொண்டு உக்ரைனுக்கு முதல்முறையாக 160 கோடி டொலரை ஐரோப்பிய யூனியன் அனுப்பியுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வொண்டொ் லெயென் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஐரோப்பிய யூனியன் எப்போதும் உக்ரைனுக்கு பக்கபலமாக இருக்கும். 

அதன் ஒரு பகுதியாக, முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளிலிருந்து கிடைத்த 160 கோடி டொலரை அந்த நாட்டுக்கு அனுப்பியுள்ளோம். 

ரஷ்யாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் போரால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்கவும் உக்ரைனுக்கு இந்தத் தொகை அனுப்பப்படுகிறது.

உக்ரைனையும் ஐரோப்பாவையும் ரஷ்யாவிடமிருந்து பாதுகாக்க, அந்த நாட்டுப் பணத்தையே பயன்படுத்துவதைவிட சிறந்த வழி வேறு இல்லை என்றாா் அவா்.

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷ்யா கடந்த 2022 பெப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனைச் சோ்ந்த 4 பிரதேசங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ஆயுத மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன. இருந்தாலும், உள்ளூா் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் காரணமாக உக்ரைனுக்கு தொடா்ந்து நிதியளிப்பதில் அந்த நாடுகள் பின்னடைவைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தங்கள் நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாயை உக்ரைனுக்கு அளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் நீண்ட காலமாகவே கூறிவந்தனா்.

ஆனால், ஐரோப்பிய நாடுகளில் தாங்கள் செய்துள்ள முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தங்கள் மீதே தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு நிதியுதவி அளிப்பது திருட்டுச் செயலுக்கு சமம் என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்துவருகிறது.

அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சொத்துகளை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்ற இடம் என்ற பெயரை ஐரோப்பிய நாடுகள் இழந்துவிடும். அது, அந்த நாடுகளின் பொருளாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

அதையும் மீறி, தங்கள் நாடுகளில் முடக்கப்பட்டுள்ள ரஷ்ய சொத்துகளில் இருந்து கிடைக்கும் வருவாயைக் கொண்டு உக்ரைனுக்கு 5,000 கோடி டொலா் கடனுதவி அளிக்க கடந்த மே மாதம் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் உறுப்பு நாடுகள் முடிவு செய்தன. அதன் ஒரு பகுதியாகவே தற்போது 160 கோடி டொலா் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.