உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவிக்கு ஜீவன் தொண்டமான் அன்பளிப்பு!
கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் பொறியியல் தொழில்நுட்ப பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவி எம்.ஆர். செஹானி நவோதயாவிற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மடிக்கணினி ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.
கடந்த வருடம் (2023) நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் நுவரெலியா (Nuwara Eliya) - அம்பகமுவ கல்வி வலயத்திற்குற்பட்ட கினிகத்தேனை மத்திய கல்லூரி மாணவி எம்.ஆர். செஹானி நவோதயா அகில இலங்கை ரீதியில் முதலாம் இடம்பெற்றார்.
இந்நிலையிலேயே, அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி வளாகத்திலுள்ள காரியாலயத்திற்கு மாணவியை வரவழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்காலத்தில் கல்வியிலும், தொழில்நுட்ப பிரிவிலும் சிறந்து விளங்க தனது ஒத்துழைப்பையும் வழங்குவதாக அவர் கூறியுள்ளார்.
அது மாத்திரமன்றி, ஜீவன் தொண்டமானின் உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அழைப்பை ஏற்படுத்தி குறித்த மாணவி கலந்துரையாடியதுடன் அவரின் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார்.
மேலும், பரிசில் பெற்ற மாணவி, பாடசாலை அதிபர், மாணவியின் பெற்றோர்கள் சார்பாக அமைச்சருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்வில், இ.தொ.காவின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் மற்றும் மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.