சிரேஸ்ட பிரஜைகளுக்கு வட்டியை வழங்குங்கள் - சஜித் பிரேமதாஸ
சிரேஷ்ட பிரஜைகளுக்கு நல்வாழ்வு வாழத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அனைவரின் தார்மீகப் பொறுப்பாக இருந்தாலும், கடந்த காலப்பகுதியில் சிரேஷ்ட பிரஜைகளின் ஒரே வருமானமாக இருந்த சிரேஷ்ட பிரஜைகள் கணக்கு மீதான வட்டி குறைக்கப்பட்டதால், அவர்கள் மேலும் அநாதரவான நிலைக்கு உட்பட்டிருப்பதாலும் இதனால் மருத்துவ வசதிகள், சத்தான உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாமல் பலர் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இதனால் இவர்களுடைய அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் சிரேஷ்ட பிரஜைகளின் கணக்குகள் தொடர்பாக 27 (2) இன் கீழ் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய வேளையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தான் பெரும் பணக்காரர்களைப் பற்றியோ செல்வந்தர்களைப் பற்றியோ பேசவில்லை எனவும், சிரேஷ்ட பிரஜைகள் தொடர்பாகவே தான் பேசுவதாகவும், இந்த சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புத்தொகைக்கான தடுத்துவைத்தல் வரி சதவீதம் குறித்தும் வரவு செலவுத் திட்டத்தில் தடுத்துவைத்தல் வரி சதவீதம் அதிகரிக்கப்படுமா என்பது குறித்தும் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், சிரேஷ்ட பிரஜைகளின் வைப்புத்தொகைக்கு விதிக்கப்படும் தடுத்துவைத்தல் வரி அளவினை அறிய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அறவிடப்படுகின்ற தடுத்துவைத்தல் வரியை மீண்டும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு பெற்றுக்கொள்ளும் முறைமை காணப்படுமாயின் அதனை அறிந்துகொள்வது அவசியம் எனவும், இந்த முறைமையின் மூலம் கல்வியறிவு குறைவாக உள்ள சிரேஷ்ட பிரஜைகள் அநாதரவற்ற நிலைக்கு உட்படுவதால் இலகு முறையைப் பின்பற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் சிறுவர் வைப்புக்களுக்கும் தடுத்துவைத்தல் வரி அறவிடப்படுவதாக இருந்தால் அந்த வரியை மீளப் பெற்றுக் கொள்ளும் முறையையும், சிறுவர் வைப்பு தடுத்துவைத்தல் வரியிலிருந்து விலக்கு அளிக்க முடியுமா எனவும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சிரேஷ்ட பிரஜைகள் இன்று மிகவும் கஷ்டமான வாழ்க்கையை ஓட்டி வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னைய நல்லாட்சி அரசாங்கம் உள்ளிட்ட பெரும்பாலான அரசாங்கங்கள் சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% வட்டி வழங்கிய போதிலும், கடந்த அரசாங்கம் அதனை இரத்து செய்ததாகவும், இந்த 15% வைப்பு வட்டியை 20 இலட்சத்திற்கும் குறைவான வைப்புத்தொகைக்கு அமுல்படுத்தி அரச மருந்தகங்கள் ஊடாக மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நிவாரண அமைப்பை தயார் செய்யுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கோரிக்கை விடுத்தார்.
தற்போதைய நிலையான வட்டி வீதம் 7.5% எனவும், மேலும் 3% இனை வழங்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் இது 15% ஆக இருக்க வேண்டும் எனவும், வரி செயல்திறனை அதிகரிக்க வேண்டியது அறவிடப்படும் வரிகளை அதிகரிப்பதன் மூலம் அல்ல, வரி செலுத்தாதவர்களை பிடிப்பதன் மூலமும் வினைதிறனான முறைகளைப் பயன்படுத்துவதன் மூலமுமே ஆகும் எனவும் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.