ரஸ்ய - யுக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற 14 நாட்கள் அவகாசம்!

இலங்கையில் நீண்டகாலமாக தங்கியுள்ள ரஸ்ய மற்றும் யுக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல் 14 நாட்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அவகாசம் வழங்கியுள்ளது.
முன்னதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இல்லுக்பிட்டிய, சுற்றுலா அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி, யுக்ரேனிய மற்றும் ரஸ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய விதி குறித்து அறிவிக்குமாறு கோரியிருந்தார்.
இந்த பயணிகளில் பெரும்பாலோர் தங்கள் இரு நாடுகளுக்கு இடையே போர் தொடங்கிய 2022 பெப்ரவரி முதல் சுற்றுலா விசாக்களின் கால நீடிப்பில் இலங்கையில் வசித்து வருகின்றனர்.
யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் தமது சொந்த நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட யுக்ரேனியர்களும் ரஸ்யர்களும் 2022 பெப்ரவரி 28 முதல் இரண்டு வருடங்கள் வரை இலவச விசா நீடிப்புகளின் அடிப்படையில் இலங்கையில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரஸ்ய - யுக்ரைன் மோதல்கள் தொடர்கின்ற போதிலும், தற்போது ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் இடம்பெறுகின்றன.
அதேவேளை யுக்ரேனியர்களும் விமானம் மூலம் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் வசதிகள் உள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவர்களின் விசாக் காலத்தை இதே முறையில் நீடிக்க வேண்டிய அவசியமில்லை என்பது குடிவரவு கட்டுப்பாட்டாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.